Saturday, May 04, 2013

பாலைவனத்தின் விதை


திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலை. பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். சாலையோரம் கண்ட அந்த காட்சி தூக்கி வாரி போட்டது. ஏற்கனவே கொளுத்தும் வெயிலில் சட்டை எல்லாம் நனைந்து ஈரம் ஆகி இருந்தது. ஒரு பழம் புளிய மரத்தை வேரறுத்து எரிந்து இருந்தார்கள். அந்த சூழ்நிலையை பார்க்கும் போது சாலையை அகலப்படுத்தும் பணி நடக்க எத்தனித்து கொண்டிருப்பது தெரிந்தது. இது தான் தொடக்கம். அடுத்த அரை மணி நேரத்தில் இது போல நூறு மரங்களேனும் வேரறுத்து எறிந்திருப்பதை பார்த்தேன்.

ஒரு விஷயம் சிந்தித்து பாருங்கள் - இந்த மரங்கள் எல்லாம் நீங்களோ நானோ நட்டது இல்லை. இவற்றை அறுத்து எரிந்தவர்கள் நட்டதும் இல்லை. பல நூறு வருடங்களுக்கு முன் மக்கள் பிரதானமாக நடந்தோ மாட்டு வண்டியிலோ செல்லும் காலத்தில், அவர்களுக்கு கதிரவனின் அனல் காற்றிற்கு பதில் மர நிழ்ல் அடிக்க வேண்டி யாரோ ஒரு தீர்க்கதரிசி நட்டு வைத்தது. ஒரு 20 கி.மி. தூரத்திற்கு இவற்றை நட்டு பல வருடங்களுக்கு பராமரித்து வந்திருக்க வேண்டும். இதற்கு எவ்வளவு பரந்த மனப்பாண்மை மற்றும் வருடக்கணக்காக பராமரிக்க அயராத உழைப்பு இருந்திருக்க வேண்டும். இப்படி மானாவாரியாக அனைத்தையும் தோண்டிப்போட நமக்கு என்ன நியாயம் இருக்கிறது?

ஒரு வீட்டின் வாசலில் இப்படி ஒரு வெட்டப்பட்ட மரம் இருந்தது. வீட்டு வாசலில் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். இத்தனை நாள் இந்த மர நிழலில் இருந்திருப்பார். இப்போது மொட்டை வெயிலில். பார்க்க சங்கடமாக இருந்தது. இப்படி கேள்வி கேட்க கூட சக்தி இல்லாமல் முன்னேற்றம் என்ற போர்வையில் என்னவெல்லாம் நடக்க விடுகிறோம்?

ஒரு குருவுடன் சத்சங்கத்தில் - கேட்கும் எங்களுக்கு ஒரு மென்மை உணர்வு மேலோங்கி நிற்கும் விதமாக இவ்வாறு சொன்னார்: “நீங்கள் நடக்கும் போது ஒரு மனிதனையோ இல்லை மரத்தையோ இல்லை மாட்டையோ பார்க்கும் போது என்னை பார்ப்பதை போல பாருங்கள்” என்று! ஒரு மரத்தையும் மாட்டையும் மனிதனுக்கு இணையாக பாவித்து இப்படி சொன்னார். இங்கோ நூறு மரங்கள் வேரறுந்து கிடந்தன! அந்த ஊரின் பெயர் சாலை! தீர்க்கதரிசனமாக நடக்க போவதை உணர்ந்து “சோலை”யாக இருந்ததை மாற்றி “சாலை” என்று வைத்து விட்டார்கள்.

ஒரு பக்கம் பசுமைப்போர்வையை அதிகப்படுதத சின்ன மரக்கன்றுகளை நட்டு வருடக்கணக்காக வளர்க்கிறார்கள் ஒரு சாரார். இங்கே 500 வருடங்கள் வளர்ந்த நூறு மரங்களை மானாவாரியாக வெட்டி சாய்த்திருக்கிறார்கள். வேதனை என்னவென்றால் பார்க்கும் அனைவருக்கும் இது வெகு இயல்பான காட்சியாக தோன்றியதுதான்! ஒரு 5 கி.மி பரப்பில் நூறு நன்று வளர்ந்த மரங்களை வேரோடு பிடிங்கினால் என்னவெல்லாம் பாதிப்பு வரும்? யாருக்கு தெரியும்? எப்படி இருந்தாலும் அங்கே இருந்த இதமான சூழல் போய் வெப்பம் கக்குகிறதே!

இதெல்லாம் யாரேனும் முன்கூட்டியே ஒரு திட்டம் வகுத்து நடக்கிறதா? மரங்களை வெட்டாமல் ஒன்றுமே செய்ய முடியாதா? எனக்கு புரியாதது என்னவென்றால் நம்மில் ஒரு பகுதியான இயற்கையை - மன்னிக்கவும்! - இயற்கையின் ஒரு பகுதியான நாம் ஏதோ அடிப்படை புரிதல் இல்லாமல் எப்படி நம்மை நாமே அழித்துக்கொண்டு முன்னேற்றம் என்று நினைத்து கொள்கிறோம் என்று!

“தேனை சேர்த்ததாம் வண்டு...
திருடி தின்றதாம் மண்டு!”

1 comment:

Radha said...

The last poem was a punch .. :)

 
Web Analytics