Monday, January 14, 2013

கல்லாய் இறுகிய நெஞ்சங்கள்...

வன்புணர்ச்சி, கூட்டு வன்புணர்ச்சி - கேட்கும் போதே உடலை லேசாக நடுங்க வைக்கும் வார்த்தைகள். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தியாவின், ஏன் இந்தியாவை பற்றி சர்வதேச தளத்தில் கூட, அகராதியில் இவை வெகு சகஜமான வார்த்தைகளாக மாறி விட்டன. அதிலும், ஏதோ ஒரு காரணத்தால் டெல்லியில் நடந்த அந்த சம்பவம் இதற்கு முன்னதாக நடந்த்திருந்த சம்பவங்களை காட்டிலும் மக்களை உலுக்கிவிட்டு விட்டது. முன்னதாக நடந்திருந்ததை காட்டிலும் என்று சொல்வதை விட குமுறி குமுறி வெடித்து விட்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்குமா? அந்த சம்பவத்திற்கு பின்னால் எப்போதும் இல்லாத அளவிற்கு இதை போன்ற செய்திகளை சராமாரியாக படிப்பதாக என் உணர்வு.

வன்புணர்ச்சியின் கோரத்தன்மை என்னவென்றால் ஏதோ மாமிசத்தை சுவைத்துவிட்டு எலும்பை விட்டெறிவதைப்போல ஒரு மனிதை உயிரை பயன்படுத்துவதற்கு சமானமாக இருக்கிறது. கூட்டு வன்புணர்ச்சி அதைவிட கோரம். உவமை வேண்டாம் போங்கள். ஒரு புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. புதுச்சேரியில் படித்த அந்த மாணவியின் புகைப்படம். சிதைபட்டு புல்தரையில் கிடந்த அந்த மாணவி, வயது என்ன 15-16 இருக்குமா?, அருகிலே விட்டெறியப்பட்ட பாடபுத்தகப்பை! எந்த அளவிற்கு நெஞ்சங்கள் காய்ந்து போய் வீறல் விட்டுப்போய் இருக்கின்றன என்பதை அடிக்கோடிட்டு காட்டும் படம். அந்த புகைப்படத்தை பற்றியே எனக்கு இரு வேறான உணர்வுகள். ஒரு பக்கம் அந்த காட்சியின் கோரத்தை அதை பார்க்காமல் அறிந்து கொள்ள இயலாது. அதே சமயம், அந்த சூழ்நிலையில் கையில் ஒரு புகைப்படக்கருவியை வைத்து கொண்டு படம் எடுக்க தோன்றுமா இல்லை உள்ளே வலிக்குமா? இந்த சம்பவம் சூடான செய்தியா இல்லை நம் நிலையை எடுத்துரைகக் கையில் எடுத்த சாட்டையா? நமக்கே வெளிச்சம்.

ஒன்று மட்டும் நிச்சயம் - இப்படி நடக்கும் ஒவ்வொறு நிகழ்வும், வன்புணர்ச்சி மட்டுமல்ல, ஒரு கொலையாகட்டும், ஊழலாகட்டும் - இது செய்பவரை பற்றி மட்டுமல்ல. இது நம்மை நாமே பார்த்து கொள்ளும் கண்ணாடி. நான் எனக்குள்ளே கண்கூடாக கவனித்தது இதைப்போன்ற செய்திகளை படிக்கும்போது- அதுவும் பட்டவர்த்தனமாக உணர்வில்லாமல் இவை வெறும் செய்தியாக எழுதப்பட்டிருக்கும்போது, என் கவனமில்லாமல் என் உள்ளும் இறுகிப்போய்விடுகிறது. சில நாட்களுக்கு முன் என் மனைவி நேசமுடன் எதையோ என்னிடம் சொல்ல (தொலைபேசியில்), நான் “நிஜமாகவா?” (ஆங்கிலத்தில் “Really?”) என்று கேட்டேன். இங்கே எழுதி இருந்ததை வைத்து அந்த வரிகளின் ஊசி முனையை நீங்கள் புரிந்து கொள்வது கடினம். ஆனால் இத்தனை நாள் என்னுடன் இருந்த அவளுக்கு நான் சொன்ன கணமே விளங்கிவிட்டது. அதன் பிறகு சொல்ல வேறெதுவும் இல்லை. நான் சொன்ன கணம் என் உள்ளே இறுகி போயிருந்த்தது. அந்த நேரம், நான் சொன்னதில் எனக்கு தவறேதும் தெரியவில்லை. பின்னர், தனிமையும் இரவு தரும் நிதானத்தில், அந்த ஊசி என்னை குத்தியபோது புரிந்தது. பின்னர் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். “There is no joy in hurting others. I am sorry!” என்று. அடுத்த நாள் காலை அதற்கு பதில் - “It still hurts” என்று வந்தது. வார்தைகளின் தாக்கமே இப்படி என்றால் செயல்களின் தாக்கம்? உண்மை என்னவென்றால் முன் படித்த அந்த செயல்களின் தாக்கம் தான் என் வார்த்தை. இதை சொல்வதற்கு எனக்கு வெட்கம் எல்லாம் இல்லை. ஆனால் இது ஒரு நழுவல் காரணமும் இல்லை. இந்த தாக்கங்களை கவனித்து தள்ளி வைக்கும் விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும்!

ரொம்ப காலத்திற்கு நான் யாரையும் நம்பக்கூடாது என்று வைத்திருந்தேன். ஒரு அரசியல்வாதியின் வாக்குறுதியாகட்டும், ஒர் விளம்பரமாகட்டும், ஒரு பெரிய தொழிலதிபர் பேசுவதாகட்டும், இணைய தளத்தில் வெடித்து எழும் உணர்வுகளாகட்டும் - எல்லாம் கேட்டு கேட்டு மரத்துப்போய் உணர்வுகள் இல்லாமல் வார்த்தை குப்பைகளாய் இரைந்து இருப்பதை போன்ற உணர்வுதான் எனக்கு. உள்ளே இறுகிப்போனதற்கு அதுவும் ஒரு காரணம் தான். பின்னர்தான் இன்னொன்று புரிந்தது. உள்ளே இறுகிப்போயிருந்தால் உணர்வுப்பூர்வமானது கூட வார்தைகளாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் என்று. அந்த டெல்லி சம்பவத்திற்கு பிறகு என் மனைவி இணையத்தில் மக்கள் பதிந்த பல குமுறல்களை என்னிடம் சொன்ன போது- “They are all just words. It doesn’t take anything to throw words like that. Nobody really cares...” என்றுதான் சொன்னேன். அந்த சம்பவத்திற்கு பிறகும் அரசாங்கம் சொன்னதெல்லாம் கூட வார்த்தைகள்தான். நான் முதலில் எழுத நினைத்தது - “யாரையும் நம்பாதீர்கள். ஒரு துப்பாக்கியை வாங்கி உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள” என்றுதான்.

ஆனால், தூங்கி போன உணர்வுகளை உலுக்கிவிடுவது போல ஏதாவது நடக்கும்போது விழிக்காவிட்டால் இன்னும் வீரியத்துடன் ஏதாவது நிகழ நேரிடும். இது படைப்பின் நியதி. இப்படி ஏதாவது நடப்பதும் அதற்கு நமது வெளிப்பாடும் ஒரு சமூகமாக நம்மை நாமே செதுக்கிகொள்வது. நிதர்சனம் என்னவென்றால் நாம் அக்கரையில்லாத அரசியல் மற்றும் பணி இயந்திரத்துடன் செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் உடையில்லாமல் அடிபட்டு வதைபட்டு இருக்கும் ஒரு ஆணையும் பெண்ணையும் தெருவில் பார்த்தவுடன் காவல் துறைக்கு முதல் கேள்வியாக பகுதி கோட்பாடு பற்றிய (jurisdiction) கேள்வி வந்திருக்குமா? அது மட்டுமல்ல - தனக்கும் தன் குடும்பத்திருக்கும் நடக்காதவரை யாருக்கு என்ன நடந்தால் என்ன என்ற மக்கள் தானே நாமும்? உண்மை என்னவென்றால் இவ்வளவு நேரிடையாக ஒரு நிகழ்வை பார்த்தவுடன், நாளை நமக்கும் இல்லை நமது குடும்பத்திற்கும் இது நடக்கலாம் என்ற பயம் வந்தவுடன்தான் இந்த போராட்டமே வலுத்தது.

நான் சொல்வது என்னவென்றால் - உள்ளே குமுறுகிறீர்களா? உங்கள் குமுறலை பதிவு செய்யுங்கள். காவல் துறையிடம் செல்ல விரும்புகிறீர்களா? சென்று அவமானப்படுவோம் என்று தெரிந்தும் சென்று புகாரை பதிவு செய்யுங்கள். பத்திரிக்கைக்கு செல்ல விரும்புகிறீர்களா? அது அக்கறை இல்லாமல் வெரும் “சூடான செய்தி”யாக வெளிவரும் என்று தெரிந்தும் அதை செய்யுங்கள். இணையத்தில் ஒரு அறிக்கை (Petition) தொடங்குகிறீர்களா? ஒரு காபி குடித்துகொண்டு சும்மா மவுசை வைத்து சுட்ட போகிறார்கள் என்று தெரிந்த்தும் அந்த அறிக்கையை பதிவு செய்யுங்கள். தெருவில் இறங்கி போராட போகிறீர்களா? மலையை பார்த்து வாய்கிழிய கத்துவது போலத்தான் முடிவு இருக்கும். ஏன்? போராட்டத்தின் காரணத்தை விட்டுவிட்டு உங்களையே போரடிய காரண்த்திற்காக கைது செய்வார்கள். இது தெரிந்தும் போராடுங்கள். உண்ணாவிரதம் இருக்கப்போகிறீர்களா? உணவில்லாமல் நீங்கள் இறந்துதான் போவீர்கள். நீங்கள் உண்ணாவிரதம் இருந்த காரியம் நிறைவேறாது. இது தெரிந்த்தும் உண்ணாவிரதம் இருங்கள்.

ஏனென்றால் இப்படி செய்யும் ஒவ்வொறு செயலும் தூங்கும் மனித சமூகத்தை தட்டிகொண்டே இருக்கும். என்ன செய்கிறீர்கள் என்பது பற்றி இல்லை. என்ன என்னால் செய்ய முடியும், மற்றும் என்ன செய்தால் வேலை செய்யும் என்று உங்களை பற்றி உங்களால் தான் தீர்மானிக்க முடியும். அதை செய்யுங்கள். “என்ன செய்து என்ன ஆகப்போகிறது” என்றால் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். சுயநலம் ஒன்றே நம்பகத்தன்மை வாய்ந்தது. ஆனால் உங்கள் சுயநலத்தை உங்களோடு சுருக்கி வைக்காமல் உலகம் முழுமையாக அதை வியாபிக்க வையுங்கள் என்று சத்குரு சொல்வார். அதை அடிப்படியாக வைத்து உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள்.

இப்படி இருந்தால் எவ்வளவு நாள் தான் இயந்திரம் தூங்கிக்கொண்டே இருக்கும்? தூங்கும் மனிதனுக்கு கம்பளி கொடுத்தால் சுகமாக தூங்குவான். அவனை உலுக்கி கொண்டிருந்தால் எரிச்சலிலேனும் எழத்தானே செய்வான்? டெல்லி சம்பவத்தில் அதுதானே நடந்தது? உங்களால் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த விதத்தில் உலுக்கிக்கொண்டே இருங்கள்!

இயற்கையிலும் ஆன்மீகத்திலும் சில நியதிகள் இருக்கின்றன.

ஒரு தனி மனிதன் வீழ்வது சுலபம்...
ஒரு கூட்டம் வீழ்வது மிக மிக சுலபம்... (குடித்திருக்கும் நான்கைந்து பேரையோ ஒரு வன்முறை கும்பலையோ நினைத்து பாருங்கள்)
ஒரு தனி மனிதன் விழிப்பது கடினம்... வீரியம் மிகுந்த உழைப்பு அதற்கு தேவை
ஒரு கூட்டம் விழிப்பது மிக மிக கடினம்.... அசாத்திய உழைப்பு அதற்கு தேவை

நமது சமூகத்தில் முதல்நிலை மனிதர்கள் அதிகம். அதனால் அவர்கள் சேரும்போது இரண்டாம் நிலை சூழ்நிலைகள் அதிகம் நடக்கின்றன. மூன்றாம் நிலை மனிதர்கள் உருவாகாமல் நான்காம் நிலை நடக்காது. அதனால்...

உங்களையும் மற்றவர்களையும் உலுக்கிக்கொண்டே இருங்கள்...

No comments:

 
Web Analytics