Esoteric Darkness [கறுவழி]




Go back to parent site Esoteric Darkness

கறுவழி செல்ல


Thursday, January 20, 2011

அவள் பெயர் தமிழரசி

இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று தோன்றினாலும் இதை சராசரி படமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. முக்கிய காரணம் படத்தின் கதையோடு தோல்பாவை கலைஞர்களின் வாழ்வை இழையோட விட்டிருப்பதுதான்.

ஊர் ஊராக சுற்றி ஒவ்வொரு ஊரிலும் தோல்பாவை கூத்து நடத்துவதும், கூட்டம் வராவிட்டாலும் உணவு கிடைக்காவிட்டாலும் பாதியில் கூத்தை நிறுத்தினால் ஊருக்கு நல்லது இல்லை என்று தொடர்ந்து அரும்பாடு படுவதும் நெகிழ வைக்கிறது. தோல்பாவை கூத்தை நடத்தும் தந்தையின் மகன் வேறு பிழைப்பு தேடி போகையில் ஊர் மக்களின் உதாசீனபடுத்துதலை நினைத்து வெடித்து போகும் போது அதில் இருக்கும் நியாயத்தையும் அந்த கோபத்தையும் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி அந்த கலையின் மீது அந்த தந்தை வைத்திருக்கும் பக்தி நெகிழ வைக்கிறது. பத்து நாள் தொடர்ந்து கூத்து நடத்தினால் மழையின்றி வறண்டு போயிருக்கும் ஊரில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பத்து நாள் முடிந்து போனபின் தரையில் அமர்ந்து வானத்தையே அவர் பார்த்து கொண்டிருக்கும்போது இப்படியும் கலையில் உருகி போயிருக்க முடியுமா என்று வியப்பு வருகிறது. கடைசியில் மழை பெய்வது சினிமாத்தனமா இல்லை அந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு பரிசா என்று தெரியவில்லை. ஆனால் கண்கள் என்னமோ கலங்கி விட்டன.

இப்படி கவனமில்லாமல் காலகாலமாக எவ்வளவு கலைகளை அரித்து போக விட்டிருக்கிறோமோ! ஊர் ஊராக வரும் கலைஞர்களாக இருந்தாலும் சரி, ஊரிலேயே கலை நடத்துபவர்களானாலும் சரி, அவர்களின் உணவையும், முடிந்தால் தங்கும் இடத்தையும் வழி வழியாக கவனித்து வந்திருந்தால் நம்முடைய தற்போதைய காலத்திலும் இவற்றில் பலவும் செழித்து கொண்டிருக்கும்! ஹும் - ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயா நமது சமூகம் இயங்கி இப்படி வாழ்வை செழுமைப்படுத்தும் பல அம்சங்களை தொலைத்து வருகிறோம். இதற்கெல்லாம் என்ன விலை கொடுக்க போகிறோமோ!


0 comments:

 
Web Analytics