கவிதா குருவம்மா காபி குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். யதார்த்தமாக பார்ப்பவர்களுக்குக்கூட குருவம்மா சோகமே உருவாக உட்கார்ந்துக்கொண்டிருந்தது தெரிந்திருக்கும். மனதின் ஆனந்தமோ சோகமோ எளிதாக வெளிக்காட்டும் முகம். கவிதாவின் வீட்டிற்கு வேலைக்கு வந்திருந்தாள் குருவம்மா. மீனவ கணவனை இழந்து செய்வதறியாதிருந்த அவளை தெரிந்த ஒருவர் கவிதாவின் வீட்டில் வேலைக்கு விட்டிருந்தார்.
"கொழந்த எதாவது..."
காபி குடிப்பதை நிறுத்திவிட்டு கவிதாவை பார்த்தாள் குருவம்மா.
"கடச்ச பண்த்த எல்லாம் குச்சு குச்சே தீத்துட்டாம்மா அவன். கடவுள் இருக்கான். நல்ல காலமா வவுத்துல புழு பூச்சி எதுவும் குடுக்குல. இல்லாங்காட்டி இப்போ அத்தையும் வச்சு என்னாத்த பண்ணிருப்பேன்?"
கவிதா பெருமூச்சு விட்டாள்.
"என்ன வேலை தெரியும்?"
"நெத்திலி ஊறுகா போடுவேன். மீன் இருந்தா வித்து தரேன். எறா புட்டு நல்லா செய்வேன். சப்பு கொட்டிகுனு துன்னுவான் அவன்..."
கவிதா வீட்டில் சைவம். சொன்ன அனைத்துமே மீன் சம்பந்தப்பட்டிருந்ததை பார்த்து கடகடவென சிரித்தாள்.
"இன்னாம்மா?"
"மீன் வாசம் கொமட்டாதா?"
"இன்னாம்மா இப்டி கேட்டுட்ட! என் வாழ்க்கையே அத்த சுத்தி தானே!"
"இங்க சைவம் மட்டும்தான். உனக்கு மீன் இல்லாட்டி ஆவாதுனா தனியா ஸ்டவ் ஒன்னு வாங்கி தரேன், அதுல உன் பாத்திரத்த வெச்சு பண்ணிக்கோ. ஆனா வீட்டு உள்ள சமைக்க வேண்டாம். பசங்களுக்கு ஆகாது." என்றவளை, "இப்படியும் இருப்பாங்களா" என்ற ரீத்யில் ஆச்சர்யமாக பார்த்தாள் குருவம்மா. ஆனால் கவிதா சொன்னது அவளுக்கு திருப்தியாக இருந்தது அவளுக்கு. நெத்திலி ஊறுகாய் இல்லாமல் அவளுக்கும் யோசிக்கவே தெரியவில்லை.
"நீங்க சைவம்னா ஊட்ல எதுவும் பண்ணலம்மா. ஆனா நெத்திலி ஊறுகா மட்டும் தின்ன உட்ருங்கோ!"
மனதில் பட்டதை அப்படியே அவள் பேசியதும், ஏனோ நம்பகம் வாய்ந்த முகம் மாதிரி தெரிந்ததும், முகத்தில் பதித்து வைத்திருந்த அந்த சோகமும், குருவம்மாவை கவிதாவிற்கு பிடிக்க வைத்துவிட்டது.
"சரி குருவம்மா, மேல உனக்கு ரூம் இருக்கு, அங்கேயே பாத்ரூமும் இருக்கு. நீ போய் மொதல்ல குளிச்சுட்டு சாப்பிடு, மத்ததை அப்புறம் பாக்கலாம். உனக்கு வெச்சுக்க தட்டு தர்றேன் அதிலேயே நீ சாப்பிட்டுக்கலாம். நெத்திலி ஊறுகா..."
"தோ பைல இருக்குதும்மா..."
கவிதா சிரித்தாள். குருவம்மாவை கூட்டிக்கொண்டு அவள் அறையை காட்டினாள்.
வினோதமாக இருந்தது கவிதாவிற்கு. அன்று இரவு அவள் கணவன் மனோஜிடம் அவள் பேசிக்கொண்டிருந்த போது:
"வேலைக்கு ஆள் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டிருந்தேன். ஆனா இந்த மாதிரி கெடைக்கும்னு எதிர்பாக்கலை." - புன்னகையுடன் சொன்னாள்
"ஏன், என்னாச்சு? பிடிக்கலைன்னா வெச்சுக்கவேண்டாம். ரமா கிட்ட சொல்லி வேற யாரையாவது ஏற்பாடு பண்ண சொல்லலாம்"
"சேச்ச, அந்த மாதிரி எல்லாம் இல்ல. மீன் காரி இல்லையா - மீன தவிர வேற எதுவும் யோசிக்க தெரியலை அவளுக்கு. வாயை தொரந்தா நெத்திலி பேச்சுதான்..." - கட கட என்று சிரித்தவாறு சொன்னாள்.
"எப்படியோ, நீ சமாளிச்சுப்பேன்னா சரி. நாளைக்கு சாப்பாடுக்கு நெத்திலி கொழம்பு வச்சு குடுத்துடாத!"
இருவரும் சிரித்தவாறே உறங்க சென்றார்கள்.
அடுத்த சில வாரங்களில் குருவம்மா வேகமாக வேலைகளை எல்லாம் கற்றுக்கொண்டாள். கவிதாவின் குடும்பத்திலும் அவளை நன்றாக ஏற்றுக்கொண்டுவிட, அவர்கள் குடும்பத்தில் ஒரு பகுதி போல ஆகிவிட்டாள் குருவம்மா. மனோஜின் ஒரே நெருடல் அந்த நெத்திலி ஊறுகாய்தான். கவிதாவிற்காக அதையும் விட்டு கொடுத்துவிட்டான்.
வேலையில் மட்டும் இல்லாமல், கவிதா, குருவம்மாவை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த பெண்ணாகவும் புரிந்து கொண்டாள். பணம் ஈடுபடும் செயல் முதற்கொண்டு, உறவினர்கள் வீட்டிற்கு அனுப்புவது என்று அனைத்திலும் குருவம்மா மிகவும் நேர்மையாகவும் ஊக்கத்துடனும் இருந்தது கவிதாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.
ஒரே நெருடல்தான் - குருவம்மாவின் முகத்தில், முதல் நாள் சோகம் அப்படியே இருந்தது. மனதின் அடித்தளத்தில் கணவனை இழந்துதான் இந்த சோகம் இருக்குமோ என்று அவளுக்கு தோன்றியது. ஒரு நாள் இந்த பேச்சை எடுத்தாள்:
"ஏன் குருவம்மா, ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?"
"உன்னாண்ட என்னாம்மா... சும்மா கேளு"
"மாடசாமி போனது உனக்கு இன்னும் கஷ்டமா இருக்கா?"
கொஞ்ச நேரம் மெளனம்.
"அவன புடிக்கும்தாம்மா. குட்சு குடிச்சு கொடல கெடுத்துகுனான். செத்து போவாம இன்னா பண்ணுவான்."
மாடசாமி மேல் குருவம்மாவிற்கு கோவம் இல்லை என்று புரிந்தது. ஆனால் அவனால் அந்த சோகம் இல்லையென்றும் புரிந்தது. வேறு என்னவாக இருக்கும்?
இன்னும் ஓரிரண்டு வாரம் சென்றிருக்கும். கவிதாவால் அவளை அப்படி பார்க்க முடியவில்லை. மனோஜிடம் இதைப்பற்றி பேசினாள்.
"நீ சும்மா ஏதோ கொழப்பிட்டு இருக்க. அவதான் ஒன்னும் இல்லைன்னு சொன்னா இல்ல..."
"அப்படி சொல்லலடா அவ. அவளுக்கு சொல்ல தெரியலை. அவ்வளவுதான். என்னமோ இருக்கு உள்ள"
"யாருக்கு, அவளுக்கா உனக்கா? அம்மா CID, தூங்க வா!"
"மனோஜ், உனக்கு தான் ஒரு Psychiatrist friend இருக்காரே, அவர் கிட்ட பேசி ஒரு appointment fix பண்ணி குடேன்?"
மனோஜ் முகத்தில் அதிர்ச்சி. "என்னடி ஆச்சு உனக்கு. அவளுக்கு இல்லாத அக்கரை எதுக்கு உனக்கு? அதுவும் psychiatric appointmentஆ? குருவம்மாவை எப்படி சம்மதிக்க வைப்ப?"
"அத நான் பாத்துக்கறேன்டா! எந்த பிரச்சனையும் வராது."
மனோஜ் பெருமூச்சு விட்டான்.
கவிதா, சரியான நேரம் பார்த்துகொண்டிருந்தாள். ஒரு நாள் குருவம்மா சளி பிடித்து, பேச சிரமப்பட்டுகொண்டிருந்தாள்.
"என்னாச்சு குருவம்மா? ஒடம்பு சரியில்லையா?"
"சளிதாம்மா, சரியா பூடும்."
"எங்க பக்கத்துல வா?" - கழுத்தில் கையை வைத்துப் பார்த்தாள்
"என்ன குருவம்மா ஜொரம் மாதிரி இருக்கு?"
"ஜொரம்னாம்மா சொல்ற?"
"ஆமாம், வா டாக்டர் கிட்ட போகலாம்"
"இல்லம்மா எனக்கெல்லாம் தானா சரியா பூடும்"
"எங்க வீட்டு பழக்கம் அதில்ல. அதுவும் உன்ன இப்படி பாத்திட்டு இருக்க முடியாது. ஒரு அஞ்சு நிமிஷம் இரு, டாக்டர் கிட்ட போன் போட்டு கேட்டுடுறேன்!"
டாக்டர் லலிதா வீட்டில்:
"குருவம்மா உள்ள வாம்மா - ஏன் ஜொரம்னு செக் பண்ணிடலாம். கவிதா, ஒரு அரை மணி நேரம் ஆகும், செக் பண்ணிட்டு உள்ள கூப்பிடுறேன்"
கவிதாவுக்கு கொஞ்சம் பயம்; ஏது எசகு பிசிகாகி விடக்கூடாதே என்று. ஏதோ ஒரு பத்திரிக்கையை எடுத்து புரட்டி பார்த்தாள். மனம் அதில் செல்லவில்லை. எப்படா அந்த அரைமணி நேரம் முடியும் என்றிருந்தது அவளுக்கு. அரை மணி நேரம் கடந்து ஒன்றரை மணி நேரம் ஓடியதும், மண்டை வெடித்துவிடும் போல் ஆகி விட்டது அவளுக்கு. கதவு திறந்து குருவம்மா வெளியே வந்தாள்.
"கவிதா, நீ உள்ள வாம்மா. குருவம்மா, கவிதாவும், ஏதோ தல வலின்னு சொன்னா. நீ ஒக்காந்திரு, ஒரு அரமணி நேரத்துல வந்துடுவாங்க."
"அரமணியா, இல்ல ஒன்றரை மணியாம்மா?"
கவிதாவிற்கு கேட்டதை நம்பமுடியவில்லை. குருவம்மாவா ஜோக் அடித்தது? கடகடவென சிரித்தாள்.
உள்ளே, டாக்டர் அறையில்:
"டாக்டர் குருவம்மாவிற்கு ஏதோ சோகம் இருக்குதானே?"
"ஆம்மாம்மா, உன் கணிப்பு சரிதான். ஆனா, அவள் புருஷனை இழந்ததுனால வந்த சோகம் இல்ல இது?"
"பின்னே?"
"அவ வாழ்க்கையே அந்த கடலையும் மீனையும் சுத்திதான். அதை இழந்ததுநால வந்த சோகம் இது?"
"என்ன சொல்ல வர்றீங்க?"
"பிழைக்க வேற வழி தெரியாம உன் வீட்டுல வேலைக்கு சேந்திருக்ககா. ஆனா, கடலும், மீன் வாசனையும், அந்த சூழலும், ரொம்ப ஆழமா பதிஞ்ச மனசு அது. சில பேரால மாறுற சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி அவங்களை மாத்திக்க முடியும். குருவம்மாவுக்கு அது இதுவரைக்கும் முடியலை. இனிமேல் முடியலாம். காலம் ஆகும். ஆனா, அந்த வாழ்க்கைக்கு நிச்சயமா அவளுக்கு ஒரு பெரிய ஏக்கம் இருக்கு"
என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள் கவிதா.
"ஆனா, அவ சோகத்தை மேலோட்டமா பாக்காம, நீ அவள இங்க கூட்டிட்டு வந்தது என்க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கவிதா. இப்போ என்ன பண்ண போற?"
"தெரியலை டாக்டர்!" - லலிதாவின் முகத்தை தாண்டி எதையோ பார்த்து வெறித்தவாறு சொன்னாள் கவிதா!
"CID மேடம், எப்படியோ துப்பு தொலக்கிட்டீங்க. சரி அன்னைக்கு நீ சொன்னதை நான் இன்னும் சீரியசா எடுத்திருக்கணும். சரி இப்போ என்ன idea? "
"குருவம்மாவை அவளோட பழைய வாழ்க்கைக்கு அனுப்புணும் மனோஜ்!"
"எப்படிடி? அவளுக்கு பாத்துக்க புருஷன் கூட இல்ல!"
"டாக்டர் கிட்ட கூட்டிட்டு போன மாதிரி இன்னு ஒரு செட்டப் பண்ணனும். ஏதாவது யோசிக்கறேன்!"
"எதுக்குடி இவ்ளோ மனக்கெடற! எரிச்சலாவும் இருக்கு பெருமையாவும் இருக்கு. நான் என்ன பண்ணனும்? "
"ஒரு ஆயிரம் ரூபா அப்புறம் தேவைப்படும். ரெடி பண்ணி வை!"
"ஏன் குருவம்மா, உன் குடிசை அப்படியேதான் இருக்கு இல்ல, மெரினா பக்கத்துல?"
"ஆமாம்மா. மாடசாமி போனதுலேந்து பூட்டிதான் கெடக்குது! நாலு மாசங்காட்டியும் ஆச்சு இல்ல!
"குருவம்மா, வந்து, வந்து..."
"இன்னாம்மா?"
"இல்ல, எனக்கு முன்னாடி எல்லாம் முதுகுவலி நிறைய வரும். அதுக்காகத்தான் வேலைக்கு ஆள் தேடிட்டு இருந்தேன்! இப்போ நல்லா குணமாயிட்ட மாதிரி தெரியுது..."
குருவம்மாவின் கண்கள் குளமாகி விட்டன. "என்ன வேலயை விட்டு தூக்க போறியாம்மா? நான் எங்கம்மா போவேன்..."
"அழாத குருவம்மா. வேலை செய்யாம இருக்குறது என் ஒடம்புக்கும் நல்லது இல்ல இல்லை! உன் குடிசைதான் அப்படியே இருக்கு இல்ல!"
"ஆனா, அங்க நான் இன்னாமா பண்ணுவேன்? மீன் புட்சாற என் புருசன் இல்லையே!" - அழுதவாறு சொன்னாள் குருவம்மா.
"உனக்கு நெத்திலி ஊறுகா போட தெரியும் தானே?"
சொன்னவுடன் குருவம்மாவின் கண்கள் பிரகாசமாகிவிட்டன. வேலை போனது கூட மறந்து சொன்னாள் - "டக்கரா போடுவேன். நான் போட்டா, பக்கத்துல எல்லாரும் சப்பு கொட்டிகுனு துண்ணுவாங்க!"
"அப்போ அந்த வியாபாரம் பண்ணேன்?"
"நெத்திலி ஓனுமேம்மா!?!"
"வாங்கிக்கோ குருவம்மா. நீ பணம் குடுத்து வாங்கினா, நெத்திலி மட்டும் வாங்கினா போதும். பேரம் பேசி வாங்குவியா?"
குருவம்மாவிற்கு வேலை போனதெல்லாம் மறந்து விட்டது. "குடுத்த பணத்துக்கும் அரகிலோ கூடவே வாங்கிட மாட்டேன்! ஆனால், மொதல் போட்றதுக்கு பணம் ஓனுமேம்மா!"
பதில் பேசாம ஆயிரம் ரூபாயை நீட்டினாள் கவிதா. "இன்னும் வேணும்னா எப்ப வேணும்னாலும் சொல்லு!"
மறுபடியும் அவள் கண்கள் குளமாகி பணத்தை வாங்கிக்கொண்டாள்!
"என்ன மனோஜ், அவ போயி மூனு மாசமாச்சு, ஒரு தகவலும் வர்ல?"
"இன்னும் அவள மறக்கலியா நீ? கஷ்டம்னா உங்கிட்ட வந்திருக்க மாட்டாளா?"
"அப்படிதான் சொன்னேன்! கூச்சப்பட்டு வராம இருந்தா?"
"சரியா போச்சு. கூச்சபடுற characterஆ அவ? சைவ வீட்டுலயே நெத்திலி ஊறுகா சாப்டவளாச்சே அவ!"
கவிதா சிரித்துவிட்டாள். "நீ சொல்றது ரைட்தான். ஆனா நாளைக்கு நான் போய் அவளை பாத்துட்டு வர்றேன்!"
அடுத்த நாள், கவிதா குருவம்மாவின் குடிசையை விசாரித்து தேடி சென்றாள். அங்கே...
முதல் முறையாக குருவம்மாவை சிரித்த முகத்துடன் பார்த்தாள் கவிதா. அவளுக்கே நம்ப முடியவில்லை!
"என்னாமா சொல்லாம வந்துட்ட. சே, ஒரு சேர் கூட இல்ல...."
"பாய்லயே ஒக்காந்துக்குறேன் குருவம்மா..."
"நாளைக்கு நான் வர்லாம்னுதான் இருந்தேம்மா, நீயே வந்துட்ட... என்ன மறந்திருப்பன்னு நென்சேம்மா..."
"ஒவ்வெரு நாளும் ஒன்ன ஒரு வாட்டியாவது நெனச்சிருப்பேன் குருவம்மா."
குருவம்மா முகத்தில் பெருமை கலந்த மகிழ்ச்சி.
"எப்படி போகுது நெத்திலி ஊறுகா business?"
"சூப்பரா போவுதும்மா. இப்போ நம்பளாண்டதான் எல்லாரும் ஊறுகா வாங்குறாங்கோ. அந்த டேஸ்டு வரலேன்னு சொல்றாங்க!"
மகிழ்ச்சியாக சிரிதாள் கவிதா.
"இந்தாம்மா..." - அந்த ஆயிரம் ரூபாயை நீட்டினாள் குருவம்மா.
"நான் இதுக்கு வர்ல குருவம்மா."
"தெரியும்மா. ஆனா, இதவிட நெறயாவே வர்தும்மா. வச்சுக்கோ. நெத்திலி கொழம்பு வெச்சுகுறேன் , சாப்டுதான் போற நீ!"
"என்ன குருவம்மா, அதுக்குள்ள எல்லாம் மறந்து போச்சா?"
நாக்கை கடித்தாள் குருவம்மா.
"சாரிம்மா. இரு டீ போட்டு தர்றேன், அத்த்யாவது குடுச்சுட்டு போ!"
"சரி குடு. வீடு பக்கம் வா குருவம்மா. மனோஜ் உன்ன பாத்தா சந்தோஷப்படுவான்!"
"நிச்சயம் வர்றேம்மா!"
அதற்குள் நெத்திலி குழம்பு கொதிக்க ஆரம்பிக்க, அதை இழுத்து வாசனை பிடித்தாள் குருவம்மா!
உப்புக்காற்று - கடல் தண்ணீர் - மீன் வாசம் - குருவம்மா!
ஒரு தொழிலின் வரவேற்பு அந்த சமூக சூழலின் தாக்கத்தை பொருத்து வேறுபடும். ஆனால் ஒன்றுமே தெரியாது என்ற நிலையில் இருந்து எனக்கு ஒரு கைத்தொழில் தெரியும் என்ற நிலை நம்பிக்கை தருவதாக அமையும். அது மட்டுமல்ல, ஒரு தொழில் பழக தெரிந்தவருக்கு வேறு ஒரு, காலத்திற்கு ஒத்த தொழில் பழகுவது சுலபம் தானே?
இதற்கு ஆதாரபூரவமான உதாரணம் பார்க்க வேண்டும் என்றால், மிகவும் அடக்கமான முறையில் தொடங்கிய ஈஷா கிராப்ட்டை எடுத்துக்கொள்ளலாம்.